முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் இலங்கை அரசு தனது படைகள் செய்யும் அட்டூழியங்களை மறுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
2009 இல் முடிவடைந்த நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் மே 18 தொடர்பில், சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ‘தாக்குதலற்ற வலயங்கள்’ என்ற இடங்களை அறிவித்து பொதுமக்கள் அங்கு சென்ற பின்னர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அத்துடன் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஏராளமான போராளிகள் மற்றும் சிவிலியன் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டனர் அல்லது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மன்னிப்பு சபை நினைவூட்டியுள்ளது.