நரேந்திர மோடியின் பயணம் பெரும் நெருக்கடியாகியுள்ளது – ஐ.ம.சக்தி குற்றச்சாட்டு!

நரேந்திர மோடியின் பயணம் பெரும் நெருக்கடியாகியுள்ளது - ஐ.ம.சக்தி குற்றச்சாட்டு!

editor 2

இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது அவரை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே தற்போது பெரும் நெருக்கடியாகவுள்ளது. இந்தியாவுடனான நட்புறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக ஆணவப் பேச்சுக்களால் அதனை சீர்குலைக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் வியாழக்கிழமை (28) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளாதார மாநாடொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2044 – இல் 30 ரில்லியன் டொலர்கள் பொருளாதாரத்தை அடைவதே இந்தியாவின் இலக்காகும். உலகில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடு இந்தியாவாகும். எமக்கு அவ்வாறான இந்தியாவுடன் பலமான பாலமொன்றை அமைத்துக் கொள்ள முடியாது போயுள்ளது.

இந்தியாவுடன் மாத்திரமின்றி ஏனைய நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.

இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக மனிதப் படுகொலைகளைச் செய்தவர்கள் தற்போது பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.

அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அவருடன் சென்று எவ்வாறு சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பது என்பதே அவர்களுக்குள்ள தற்போதைய பிரச்சினையாகும்.

சில சந்தர்ப்பங்களில் சம்பூருக்கு செல்லாமலும் விடலாம். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது எமக்கு தெரியாது. பொருளாதார ரீதியிலான இராஜதந்திர உறவுகளிலிருந்து விலகி, ஆணவம் கொண்ட பேச்சுக்களால் தற்போது இந்தியாவுடனுள்ள நட்புறவையும் பகைத்துக் கொள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. மூடிய பொருளாதாரம் கொண்ட சிறிய நாடுகளால் அபிவிருத்தியடைய முடியாது.

இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கூட டிரில்லியனுக்கும் அதிக பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.

எமக்கு மிகவும் அண்மையிலுள்ள தென்னிந்திய மாநிலங்களே இவ்வாறு பாரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன. எனவே இவற்றிடமிருந்து நாம் பொருளாதார ரீதியில் பயன்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

Share This Article