‘சில தனிநபர்கள் மீது தடை விதிப்பதில் இங்கிலாந்து மற்றும் பிறநாடுகளின் ஒருதலைப்படசமான முடிவுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயல்முறையை சிக்கலாக்கவே உதவும்’ – இவ்வாறு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை படைகளின் மூன்று முன்னாள் தளபதிகள் கருணா என்று அறியப்பட்ட வி. முரளிதரன் ஆகியோருக்கு கடந்த திங்கட்கிழமை தடை விதித்தது பிரிட்டன்.
இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் நேற்று வெளியிட்டார்.
வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
‘பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சு இலங்கையின் உள்நாட்டு போரின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் துஷ்பிரயோகங்களுக்கான பிரிட்டனின் தடைகள் என வெளியிட்ட செய்திக்குறிப்பை வெளிவிவகார அமைச்சு கருத்தில்கொண்டுள்ளது.
பிரிட்டன் அரசாங்கம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.
இவர்களில் மூவர் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள். மனித உரிமைகள் மீறலுக்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட மாட்டார்கள் என்ற அர்ப்பணிப்பு என வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பையும் நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.
இந்த அடிப்படையில் இது குறிப்பிட்ட தனிநபர்களின் சொத்துகளை முடக்குதல், போக்குவரத்து தடை ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.
இவ்வாறான ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு உதவாது. மாறாக, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை குழப்பமானதாக்கும்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பொறிமுறைகளை
வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்தகாலத்தின் எந்த மனித உரிமைகள் மீறலும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை ஊடாகவே கையாளப்பட வேண்டும் – என்றும் கூறினார்.