பிரித்தானியாவின் அறிக்கை தொடர்பில் மஹிந்த அறிக்கை!

பிரித்தானியாவின் அறிக்கை தொடர்பில் மஹிந்த அறிக்கை!

editor 2

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு தலைமையதிகாரிகளுக்கு பிரித்தானியா சமீபத்தில் விதித்த தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனக் குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. 

எனினும் இந்த குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்நாட்டுப் போர் இடம்பெற்ற குறித்த காலத்தில் இலங்கையின் அப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியாக தாமே இருந்ததாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்தத் தாமே முடிவு செய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமது முடிவை ஆயுதப்படைகள் செயற்படுத்தியதாக கூறினார். 

மேலும் அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது… 

அமைதியைப் பேணுவதற்காக எனது அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் ஜெனீவா மற்றும் ஒஸ்லோவில் இரண்டு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது,இவை இரண்டும் விடுதலைப் புலிகளால் ஒருதலைபட்சமாக நிறுத்தப்பட்டது.

ஜூன் 2006 ஆம் ஆண்டில் கெபிதிகொல்லாவவில் பேருந்து ஒன்றின் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது.குறித்த தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 86 பேர் காயமடைந்தனர்.அதனைத் தொடர்ந்து நான் போரை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

போரின் போது பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடந்ததாகப் பிரித்தானிய அரசாங்கம் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக நிராகரிக்கிறேன். 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி அன்று, பிரித்தானிய பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில், கொழும்பில் அப்போதைய பிரித்தானிய பாதுகாப்பு இணைப்பாளராக இருந்த லெப்டினன்ட் கர்னல் அன்டன் காஷ், இலங்கை இராணுவத்தின் ஒழுக்கத்தைப் பெரிதும் பாராட்டுவதாகவும், பொதுமக்களைக் கொல்லும் கொள்கை இராணுவத்திற்கு இல்லை என்றும் தன்னிடம் கூறியதை லார்ட் நேஸ்பி நினைவு கூர்ந்தார். 

லெப்டினன்ட் கர்னல் அன்டன் காஷ் லண்டனுக்கு அனுப்பிய போர்க்கால அறிக்கைகளின் பெரிதும் திருத்தப்பட்ட பதிப்பு மட்டுமே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது,ஏனெனில் அந்த அறிக்கைகளின் உள்ளடக்கம் பிரித்தானிய அரசியல் அதிகாரிகளால் ஊக்குவிக்கப்படும் பார்வையிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது.நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போரை நடத்தினோம் என்பதை நான் வலியுறுத்துகிறேன். 

போர் முடிவடைந்த சில மாதங்களுக்குப் பிறகு, போர்க்கால இராணுவத் தளபதி 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நின்றபோது, ​​தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது, மேலும் அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவான வாக்குகளில் 60% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார், இது பிரித்தானிய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் கருத்தையும் மறுக்கிறது. 

2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்த கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பது,விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்களைத் தண்டிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரைத் திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவாகிறது. 

பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபாண்ட் ஏப்ரல் 2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்து இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியபோது, ​​நான் அதை முழுமையாக மறுத்துவிட்டேன். பின்னர், விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களை மேற்கோள் காட்டி லண்டனின் தி டெலிகிராஃப் செய்தித்தாள், பிரித்தானிய தொழிலாளர் கட்சிக்குத் தமிழ் வாக்குகளைப் பெறுவதற்காக மிலிபெண்ட் இலங்கையில் நடந்த போரில் தலையிட முயன்றதாக வெளிப்படுத்தியது.

இன்றுவரை, புலிகளுக்கு எதிரான போரில் பிரித்தானிய அரசாங்கங்களின் நிலைப்பாடு குறித்த இந்த தரப்பின் அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது என்பதைக் கூறுவது வருத்தமளிக்கிறது. 2009 ஆம் ஆண்டில்,பயங்கரவாத அமைப்பாக விடுதலைப்புலிகளை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டது. அந்த அமைப்பையே இலங்கை தோற்கடித்தது. 

பல்வேறு தரப்பினரின் சட்டரீதியான துன்புறுத்தல்களிலிருந்து அதன் ஆயுதப் படைகளைப் பாதுகாக்கப் பிரித்தானிய அரசாங்கம் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறப்புச் சட்டத்தை இயற்றியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”எனவே, இலங்கையின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த படையினரை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தலுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.”

Share This Article