யாழ். நூலகம் எரிப்பு; குழு அமைத்து விசாரிக்குமாறு இளங்குமரன் கோரிக்கை!

editor 2

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற் றுகையில்

வடக்கு மாகாணம் என்பது கல்வியில் தலைசிறந்து விளங்குகின்றது. இந்நிலையில் ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டத்தில் யாழ். நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியமைக்காக நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். எமது நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்திற்கு மூலக் காரணங்களில் ஒன்றாக யாழ். நூலக எரிப்பு உள்ளது.

இப்போது பட்டலந்த வதை முகாம் தொடர்பில் பேசுகின்றனர். இங்கு தமிழ், சிங்கள இளைஞர்களின் இறப்புக்கு காரணமானவர்களே அன்றைய காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த போது எமது யாழ். நூலகத்தையும் தமிழர்களின் உணர்வுகளையும் எரித்து நாசமாக்கினர். இதற்கான விசாரணையும் தேவையாகும்.

யுத்தத்தால் 30 வருடங்களாக நாங்கள் யுத்தத்தால் பின்தங்கியிருக்கின்றோம். தமிழ் இளைஞர்கள் மட்டுமன்றி சிங்கள இளைஞர்களும் இந்த யுத்தத்திற்குள் தள்ளப்பட்டு பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் சாதாரண அம்மா அப்பாக்களின் பிள்ளைகளே.

இதற்கு காரணமாக இருந்த அப்போது கல்வி அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திலும் இருந்தார் என்ற தகவல்கள் உள்ளன. இதனால் பட்டலந்த வதை முகாம் போன்று யாழ். நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணை குழுவை அமைத்து நீதியை தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும என்று இந்த சபையில் வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.

Share This Article