உள்ளூராட்சி சபைத் தேர்தல 2025 இற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவான வேட்புமனுக்கள் யாழ்.மாவட்டம், கிளிநொச்சி மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிறேமச்சந்திரன் உட்பட்டவர்கள் தலைமையிலான சங்கு சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் சுயேட்சைக்குழுவான இ.அர்ச்சனா தலைமையிலான சுயேட்சைக் குழு உட்பட்ட கட்சிகளின் வேட்புமனுக்கள் பரவலாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,
குறித்த விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றில் முறையிடவுள்ளதாக சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடர்பிலான போதிய அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என்றும் இது திட்டமிட்ட வகையில் மத்தியில் ஆளும் கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ளவர்களை வெல்ல வைப்பதற்கான சூழ்ச்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட கட்சிகள் இணைந்து உயர் நீதிமன்றில் நீதி கோரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.