தேசபந்து தென்னகோன் தலைமறைவு!

தேசபந்து தென்னகோன் தலைமறைவு!

editor 2

ஒப்பந்தத்துக்காக பொலிஸ் திணைக்களத்தை காட்டிக்கொடுத்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரைத்தேடி முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர்  சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை  (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்   நீதி மற்றும்  தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்   அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஊழல் மோசடி தொடர்பான கோப்புக்கள் எம்மிடம் உள்ளன.  விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே அவசரப்பட வேண்டாம். நீதிமன்றத்துக்கு  கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம்  அரசாங்கத்துக்கு கிடையாது.  

நீதிமன்றம் சுயாதீனமாக  செயற்படுகிறது. ஆகவே கடந்த காலங்களைப் போன்று  எம்மால் செயற்பட முடியாது. ஒருசிலர் கடந்த பாராளுமன்றத்தில்  பாராளுமன்ற உறுப்புரிமையை  பணத்துக்காக விற்பனை  செய்துள்ளார்கள். இந்த  விடயம் தொடர்பிலும் ஆராயப்படும்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமாரவை பார்த்து முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க  ‘அனைத்தும் தெரியும்’ என்று குறிப்பிட்டதாக  எதிர்க்கட்சியின் உறுப்பினர் குறிப்பிட்டார். கண்ணாடி மாளிகைக்குள் இருந்துக் கொண்டு கல்லெறிய வேண்டாம்.  

ஊழல், மோசடியுடன் தொடர்புடைய  அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிடுங்கள் அவர்களின் ஊழல் வரலாற்றை குறிப்பிடுவதாக ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்துக்கு வந்து எதிர்க்கட்சிகளின் முன்னிலையில் குறிப்பிட்டார். அப்போது எவரும் வாய் திறக்கவில்லை. ஊழல்வாதிகள் அனைவரும் அமைதியாகவே இருந்தார்கள்.

இந்த நாட்டின் சட்டத்தரணிகள் தான் நீதித்துறையை சுயாதீனப்படுத்தினார்கள். ஆகவே சட்டத்தரணிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். போராட்டத்தின் ஊடாக  நீதித்துறை சுயாதீனப் படுத்தப்பட்டது. 

எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரின் தந்தைக்கும், சிறு தந்தைக்கும் ஏற்றாட்போல்   தீர்ப்பு எழுதாத காரணத்தால்  பிரதமர நீதியரசர்  சிரானி பண்டாரநாயக்க  முறையற்ற வகையில் பதவி நீக்கப்பட்டார். வரலாற்றில் முதல் முறையான வங்கி தலைவரை பிரதம நீதியரசராக்கினார்கள். இவ்வாறான வரலாறும் உண்டு.

முன்னாள் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்க  நீதித்துறையை மலினப்படுத்தினார். பாராளுமன்றத்துக்குள் இருந்துக்கொண்டு   தேர்தலும் இல்லை,  நிதியும் இல்லை, நீதிமன்றத்தின் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை பாராளுமன்றத்தக்கு உண்டு’ என்று  நீதிமன்றத்தை  மலினப்படுத்தினார். நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.

நாங்கள் நீதித்துறையை முழுமையாக மதிக்கிறோம். சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளித்துள்ளோம். ஜனாதிபதி நீதித்துறையுடன் இணக்கமாகவே செயற்படுகிறார்.  ஆகவே நீதித்துறையுடன் எவ்வித முரண்பாடுகளும் அரசாங்கத்துக்கு கிடையாது.

பிணைமுறி கொடுக்கல்  வாங்கல்  மோசடியின் சந்தேக நபராக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அiழைத்து வருவது தொடர்பில் தற்போது கேள்வியெழுப்பப்படுகிறது.

2021.12.24 ஆம் திகதி சிங்கப்பூர் நாட்டின் குறித்த விடயதானத்துடன் தொடர்புடைய தரப்பினர்’ கைதிகள் பரிமாற்றல் சட்டத்தின் பிரகாரம் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அனுப்ப முடியாது’என்று குறிப்பிட்டுள்ளது.

அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான  வழக்கு விசாரணை செய்யப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சர்வதேச எண்ணக்கருவுக்கு  அமைவாக  கைதிகள் பரிமாற்றல் சட்டத்தின் பிரகாரம்   தொடர்புடைய நாட்டுக்கு இரண்டு முறை கோரிக்கை விடுக்க முடியும். இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பந்தத்துக்காக பொலிஸ் திணைக்களத்தை காட்டிக்கொடுத்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அவர்  தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகவே அரசாங்கம் ஏதும் செய்யவில்லை என்று மூன்றாம் தர அரசியல்வாதிகளை போல் குற்றஞ்சாட்ட வேண்டாம் என்று எதிர்தரப்பினரை நோக்கி குறிப்பிட்டார்.

Share This Article