தற்போதைய ஆட்சியாளர்களே 2005 இல் ராஜபக்ஷவினரை ஆட்சிக்கு கொண்டுவந்தனர் – முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு!

தற்போதைய ஆட்சியாளர்களே 2005 இல் ராஜபக்ஷவினரை ஆட்சிக்கு கொண்டுவந்தனர் - முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு!

editor 2

மக்கள் விடுதலை முன்னணி 2005இல் எடுத்த தவறான தீர்மானங்களின் பெறுபேறாகவே தற்போது ராஜபக்‌ஷவினரின் மோசடிகள் தொடரபில் கதைக்க வேண்டியுள்ளது. அதனால் அவர்களின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

2005ஆம் ஆண்டில் ராஜபக்ஷ்வினரை இப்போது ஆட்சியில் இருப்பவர்களே ஆட்சிக்கு கொண்டு வந்தனர். அப்போது நான் ராஜபக்‌ஷவினருக்கு எதிரான முகாமிலேயே இருந்தேன். அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற மேடையிலேயே இருந்தேன். ஆனால் ராஜபக்ஷவினர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று இப்போது கூறுபவர்கள்,

அவர்தான் சிறந்த நபர் என்று கூறும் மேடையிலேயே இருந்தனர். நீங்கள் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்களின் பெறுபேறுகளையே இப்போது நீங்கள் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஷ்வினர் திருடர்கள் என்று தெரிந்துகொண்டே அவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்தீர்கள். ஹெல்பிங் அம்பாந்தோட்டை திட்டத்தில் மோசடி குற்றச்சாட்டில் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயர் தெரிவிக்கப்பட்டிருந்ததை அறிந்துகொண்டே அவரை பிரதமராக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தது.

நீங்கள் அரசாங்கத்தை எடுப்பதற்காக 77/88 காலத்தில் கஷ்டப்பட்டீர்கள். லெனின் அரசாங்கத்தை அமைப்பதாக கூறினாலும் அந்த அரசாங்கத்தை செய்யவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி கூறும் அரசாங்கத்தையே செய்துள்ளீர்கள் மேலும் ராஜபக்ஷ்வினரின் மோசடிகளை கூறும் போது எங்களை பார்த்து கூற வேண்டாம்.

அன்று நீங்கள் எடுத்த தவறான தீர்மானத்திற்கே இன்று மக்கள் நஷ்ட ஈட்டை செலுத்த வேண்டியுள்ளது. 2005இல் நீங்கள் தனியாக போட்டியிருந்தால் அப்போது ராஜபக்ஷவினர் தோல்வியடைந்திருப்பர். 2005ஆம் ஆண்டின் பின்னரே இந்த நாட்டில் ஊழல் கலாசாரம், குடும்ப ஆட்சி உருவானது. அதனை நீங்களே கொண்டு வந்தீர்கள். இதில் உங்களுக்கும் பங்கு உள்ளது. அதனால் நீங்கள் ராஜபக்ஷவினர் தொடர்பில் கூறும் போது எங்களை பார்க்காது ராஜபக்ஷவினரின் படங்களை பார்த்து கூறுங்கள்.

அதேபோன்று கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி அதிகமான அமைச்சுக்களை வைத்திருக்கும்போது அதற்கு எதிராக எதிர்க்கட்சியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடுமையாக விமர்சித்து வந்தார். நானும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தேன், ஆனால் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கீழ் பாரியளவில் அமைச்சுக்கள் காணப்படுகின்றன என்றார்.

Share This Article