சங்கு கூட்டணியில் ஏழு கட்சிகள் கூட்டிணைவு!

Editor 1

உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் கூட்டாகக் களமிறங்குவதற்கு இதுவரையில் ஏழு கட்சிகள் இணங்கியுள்ளதோடு, மேலும் சில கட்சிகள் கூட்டில் இணைவதற்கான விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற விக்னேஸ்வரன் தரப்பு இறுதி முடிவினை விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளதோடு, கூட்டணி அமைக்கும் இரண்டாவது கலந்துரையாடலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த இணக்கம் எட்டப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், மற்றும் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். கடந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.

இந்தச்சந்திப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது, எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வடக்கு,கிழக்கில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது பற்றிய உரையாடல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் கூட்டிணைந்து போட்டியிடுவது தொடர்பிலும், சமகால அரசியல் கள நிலைமைகள் சம்பந்தமாகவும் ஆராய்ந்திருந்தோம்.

அதேநேரம், உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கு அப்பால் தமிழ் மக்களின் அனைத்து விடயங்களையும், முன்னெடுத்துச் செல்வதற்காக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளையும் ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு இன்னும் சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த வகையில் வடக்கு,கிழக்கில் பரந்துபட்ட கூட்டணியாக முன்னெடுப்பது தான் நோக்கமாக உள்ளது.

தமிழ்த் தேசியத்தினை நேசிக்கின்ற, அதற்காகச் செயற்படுகின்ற சக்திகள் பலவும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையான செயற்பாடுகளை வலியுறுத்தி நிற்கின்றன. ஆகவே அவர்களின் கோரிக்கைகளையும் நாம் கவனத்தில் கொண்டி இந்த முயற்சியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் எம்மையும் எம்முடன் இணைந்துள்ளவர்களையும் ஒரு தீண்டத்தகாதவர்களாகவே கருதுகின்றார்கள். ஆகவே அவர்கள் ஒற்றுமையை விரும்பி எம்முடன் பேசுவதற்கு தயாராக இருப்பார்களாக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம்.

அதேபோன்று தமிழரசுக்கட்சியும் தனித்துப்போட்டியிடுவதற்கே விருப்பத்தினை வெளிப்படுத்தியிருக்கின்ற நிலையில் அவர்களின் தேர்தலை முகங்கொடுப்பதற்கான தீர்மானம் எடுப்பதற்கான சகல உரித்துக்களும் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் அதுபற்றி நாம் எதனையும் கூற முடியாது என்றார்.

இதேவேளை, குறித்த கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி இணைவதா இல்லையா என்பது தொடர்பிலான முடிவை அக்கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடாத்தி விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் சார்பில் கலந்துரையாடலில் பங்கேற்ற சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

Share This Article