இரு நாடுகளுக்கு இடையிலான நில இணைப்பு முன்மொழிவை நிராகரித்தது இலங்கை!

editor 2

இந்தியாவின் நீண்டகால ஆர்வமும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் போது விரைவான முன்னேற்றங்களை கண்ட, இரு நாடுகளுக்கும் இடையிலான நில இணைப்புக்குத் தயாராக இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்தி, அதனை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக திருகோணமலையை இணைப்பது இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்ட 7 ஒப்பந்தங்களில் இருநாடுகளுக்கு இடையிலான நில ரீதியான இணைப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அப்போதைய இந்திய பிரதமாரான அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் இடையில் இரு நாடுகளுக்கு இடையில் பாலம் அமைப்பதற்கான முதலாவது இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

ஆனால் நாட்டில் காணப்பட்ட விடுதலை புலிகளுடனான போர் சூழல் இரு நாடுகளுக்கு இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதில் நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

இருப்பினும் 2022 ஆம் ஆண்டில் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையிலான இணைப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதி என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த போதும், கடந்த ஆண்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்திருந்த போதும் எட்டப்பட்ட ஒப்பந்தங்களில், இரு நாடுகளையும் ஒரு தரைவழி பாலம் மூலம் இணைக்கும் திட்டம் மையமாக இருந்தது.

எனவே ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை முன்னெடுப்பதில் இந்தியா மிகுந்த ஆர்வம் காட்டிய போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இரு நாடுகளுக்கு இடையிலான நில இணைப்பு யோசனையை நிராகரித்துள்ளது.

Share This Article