நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று பாராளுமன்றத்தில் எழாவது தினமாக இடம்பெற்றது. காலை 10 மணி முதல் இடம்பெற்ற விவாதத்தின் போது ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பாக விமர்சன ரீதியாகவும் ஆக்கபூர்வமான வகையிலும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மாலை 6.10 மணி அளவில் விவாதம் முடிவுக்கு வந்த நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை சபை அனுமதிக்கின்றதா என கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா கயந்த கருணாதிலக்க வாக்கெடுப்பை கோரினார். அதன் பிரகாரம் வாக்கெடுப்புக்கு செல்லுமாறு சபாநாயகர் கோரியதை அடுத்து கோரம் மணி ஒலிக்கப்பட்டு,வாக்கெடுப்பு இலத்திரணியல் முறையில் இடம்பெற்றது.
அதன் பிரகாரம் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 109 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 46 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. ஜனநாய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இந்த வாக்கெடுப்பில் சுயாதீன உறுப்பினர் இராமனாதன் அர்சுனா, ப.திகாம்பரம், தயாசிறி ஜயசேகர இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் கலந்துகொள்ளவில்லை.
அதனடிப்படையில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆளும் கட்சியில் இருக்கும் 159 பேரில் 154 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். அமைச்சர் விஜித்த ஹேரத் வெளிநாடு சென்றுள்ளதால் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
வரவு செலவு திட்த்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டாமன் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ரவி கருணாநாயக்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, நாமல் ராஜபக்ஷ் தலைமையிலான ஸ்ரீலங்கா பாெதுஜன பெரமுன, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிராக வாக்களித்தன.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.