புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுமென ஆட்சியமைப்பதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கூறியிருந்த போதிலும், தற்போதும் அந்த சட்டம் பயன்படுத்தப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்குப் பாதிப்பு இல்லை என கூறுகின்ற அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் குறித்த ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும் தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, புதிய சட்டமூலமொன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியதன் பின்னர் இவ்வாறான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குள் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் விரைவில் தேசிய பாதுகாப்புக்கான சட்டமொன்றை உருவாக்குவதற்கான, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.