எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சார கட்டணத்தை மறுசீரமைக்க நேர்ந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சக்தி வலு அமைச்சர் குமார ஜயக்கொடி, மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலை காரணமாக மின்னுற்பத்திக்கு அதிகப் பிரயத்தனம் எடுக்கவேண்டியுள்ளது.
இதனால் எதிர்வரும் காலத்தில் மின்சாரக் கட்டணத்தைச் சீரமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படலாம். ஆனால், அதற்கு எமக்கு
விருப்பம் இல்லை. மின்சார சபையின் செலவினங்களை கையாண்டு தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதாக இருந்தால் கட்டாயமாகக் கட்டண சீரமைப்பு ஒன்றுக்குச் செல்ல வேண்டியேற்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை 2024 இன் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்தியிருக்கின்ற முறைமை சட்டத்துக்குப் புறம்பானது என்று தெரிவித்து, மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தினால், சட்ட ஒழுங்கமைப்பு திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள், அரசாங்கம் தொடர்ந்தும் அனல் மின்னுற்பத்தியையே ஊக்குவிப்பதாகவும், காற்றாலை அல்லது சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்கச்
சக்தி வளத்தை நோக்கி நகர விருப்பமின்றி இருப்பதாகத் தெரிவித்தனர்.