நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
பணியிடங்களில் இருப்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் நீண்ட நேரம் வெளியிடங்களில் இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிய பின்னர் குளிர் நீரில் குளித்தல் பொருத்தமானது என்றும், வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
முடிந்தளவு பகல் வேளைகளில் வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது இலகு நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.