உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம்; விவாதத்திற்கு அழைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம்; விவாதத்திற்கு அழைப்பு!

editor 2

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

பொது நிர்வாக அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தை கடந்த ஜனவரி 9ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்ததாகவும், பின்னர் இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி பிற்பகல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றில் நடத்தப்படும். 

இந்த விவாதத்துக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க முடியும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துகள் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றில் நேற்று அறிவித்தார். 

அதன்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஏலவே சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான திருத்தத்திற்கும், அந்த வேட்பாளர்களின் கட்டுப்பணத்தைத் மீள ஒப்படைக்கும் திருத்தத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article