உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து பார்த்து செயற்பட்டிருந்தால், இந்த வழக்கை ஒரு நாளில் முடித்துக்கொண்டிருக்கலாம். இந்த விடயத்தில், சட்டமா அதிபர் திணைக்களம் தவறிழைத்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரிஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (14) விசேட அமர்வாக கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது.
உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொர்பில் உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பியிருந்த தீர்ப்பு இதன்போது சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு செய்தபோது, அதுதொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சிமன்றம் தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரைக்கு முரணாகியுள்ளதால், இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அனுமதிக்கப்பட வேண்டும் என உள்ளூராட்சி மன்ற வழக்கு தொடர்பான தீர்ப்பில், தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் இது தொடர்பல் ஆரம்பத்தில் இருந்து ஆராய்ந்து பார்து, அமைச்சரவைக்கு இதுதொடர்பில் உத்தரவாதம் ஒன்றை வழங்கி இருந்தால், ஒரு நாளில் இந்த வழக்கை பேசி முடித்திருக்கலாம். இது சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறாகும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தில் இவ்வாறானதொரு விடயம் இருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டும்வரை, இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என்பதை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு தெரியாதா?
உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டே சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டிருக்கிறது.
அதனால் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயம் தொர்பில் ஆராய்ந்து பார்த்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தால், இந்த பிரச்சினை எழுந்திருக்காது என்றார்.