நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் மீண்டும் இணைக்க முடியுமென இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை மீண்டும் இணைப்பதற்குத் தேவையான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேரம் மின்சார விநியோகத்தடை அமுல் படுத்தப்படுகிறது.
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், தேவையேற்படின் மின் விநியோகத்தடை அமல்படுத்தப்படும் நேரம் 30 நிமிடங்களால் மாறுபடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ABCD ஆகிய வலயங்களில் பிற்பகல் 3.30 முதல் 4 மணிக்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 வரையான காலப்பகுதிக்குள் மீள இணைக்கப்படும்.
EFGHUV ஆகிய வலயங்களில் பிற்பகல் 5 மணி முதல் 5.30க்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு மாலை 6.30 முதல் 7 மணி வரையான காலப்பகுதிக்குள் மீள இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
IJKLPQ ஆகிய வலயங்களில் மாலை 6.30 முதல் 7 மணிவரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 8 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதிக்குள் மீள இணைக்கப்படும்.
RSTW ஆகிய வலயங்களில் இரவு 8 மணி முதல் 8.30 வரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 9.30 முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் மீள இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தமது பிராந்தியங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மின்சார சபையால்அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்திற்குப் பிரவேசித்து, மின்வெட்டு இடம்பெறும் முறைகுறித்து அறிந்து கொள்ள முடியும்.
அல்லது மின்சார சபையின் கைப்பேசி செயலிமூலம் அல்லது 1987 என்ற துரித இலக்கத்திற்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் மின்வெட்டு இடம்பெறும் முறைகுறித்து அறிந்து கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.