உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கில் தமிழ்க்கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் அவதானம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கில் தமிழ்க்கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் அவதானம்!

editor 2

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்க்கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி தெரிவித்துள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக் கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுமக்களின் ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் கேட்டறிந்து மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற வேட்பாளர்களை இனம்கண்டு களம் இறக்குவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம். அந்தவகையில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்காக ஏனைய தமிழ்க்கட்சிகளோடு இணைந்து போட்டியிடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியானது நீண்ட காலமாகச் சிங்களக் குடியேற்றம், பௌத்தமய மாக்கல் செயற்பாடுகளால் இனவிகிதாசாரத்தில் பாரிய மாற்றம் ஏற்படும் நிலைமை உள்ளது.

எனவே தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடும் பேசி அங்கு இணைந்து போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம். கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் போல இந்த தேர்தல் அமையாது. ஏனெனில் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாமல் திணறுகின்ற நிலைமையை
அவதானிக்கிறோம்.

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பெரும்பாலான தமிழ் மக்கள் இன்று வருத்தப்படுகின்ற நிலையை காண்கின்றோம்.

எனவே உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுக்கவேண்டும். எமது பிரதேசத்தில் நாங்களே ஆளுகை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கவேண்டும். அந்தவகையில் பலமான கூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கரங்களை பலப்படுத்தவேண்டியது வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் கடமையாக இருக்கிறது என்றார்.

Share This Article