ஐந்து ஆண்டுகாலத்துக்குள் மலையகத் தமிழர்கள் இலங்கைப் பிரஜைகளாக மாறுவர்!

ஐந்து ஆண்டுகாலத்துக்குள் மலையகத் தமிழர்கள் இலங்கைப் பிரஜைகளாக மாறுவர்!

editor 2

மலையக தமிழர்கள் ஐந்து ஆண்டு காலத்துக்குள் இலங்கையின் முழுமையான பிரஜைகளாக மாறுவர் என பெருந்தோட்ட மற்றும் சமூக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

மலையக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென அடிப்படை வசதிகள் இல்லை. அவர்களும் இந்த நாட்டின்
பிரஜைகள்தான். அவர்களுக்கு நாம் செய்யும் சேவையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறோம். அதிகளவானர்கள்
அடையாள அட்டையின்றி உள்ளனர். பிறப்புச் சான்றிதழ் இன்றியும் இருக்கின்றனர்.

கிளீன் சிறீ லங்கா திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில லயன் பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகள் ஆரம்பமாகி உள்ளதுடன், அதனுடன் இணைந்து அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும்
பணியும் ஆரம்பமாகி உள்ளது.

பாதை வசதிகள் இன்றி பல பெருந்தோட்ட மக்கள் இக்கட்டான நிலையில் உள்ளனர்.

பெருந்தோட்டக் கம்பனிகளின் இடம் என்பதால் அங்கு பாதை வசதிகளை செய்ய முடியாதென கடந்த அரசாங்கங்கள் கூறின. இவர்கள் தான் அந்த உடன்படிக்கையை செய்தனர்.

என்றாலும், பாதைகள் செய்யப்படுவதன் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தான் அதிக நன்மையடையும் என நினைக்கிறோம். கட்டம் கட்டமாக அவர்களுக்கான பாதை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை
எடுப்போம்.

இந்திய தூதகரத்துடன் வீடுகளை அமைப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். இந்த வருடத்தில் 5,500 வீடுகள் முதல் கட்டமாக அமைக்கப்படும்.
அந்த மக்களுக்கு இன்னமும் முகவரி இல்லை.

தபால் திணைக்களத்துடன்இணைந்து விரைவில் அவர்களுக்கு முகவரியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வீடுகள் அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்தன. பலர் தமது வீடுகளை விற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் கட்டப்படும் வீடுகள் முதல்கட்டமாக அதிகமாக மண்சரிவை சந்தித்துள்ள மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கே வழங்கப்படும்-என்றார்.

Share This Article