இலங்கையில் சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர் என்றும் சுமார் 2,000 வைத்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர் எனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
மேலும் 5,000 வைத்தியர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார் கொழும்பில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே
அவர் இதனை கூறினார்.
2025 வரவு-செலவுத் திட்டம் மூலம் வைத்தியர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 7,000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாட்டில் வைத்தியர்கள் தங்கியிருப்பதை நீட்டிப்பதன் மூலம் இலவச சுகாதார சேவைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான முன்மொழிவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்துள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும்.
அனைத்து வகை வைத்தியர்களுக்கும் தகுதிகள், செயல்திறன் மற்றும் சந்தை
மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தனித்துவமான சம்பள அமைப்பு
அறிமுகப்படுத்தப்பட வேண்டும்- என்றார்.