காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பில் போராட்டம்! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பில் போராட்டம்! (படங்கள்)

editor 2

பல்வேறு அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (4) பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

“இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்”, “நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும்போது நாங்கள் ஒடுக்கப்படுவதா”, “உங்களுக்கு சுதந்திர நாள் எங்களுக்கு திண்டாட்ட நாள்”, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே”, “எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும்”, “நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு”, “சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு”, “எங்கே எங்கே உறவுகள் எங்கே” போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமான இப்பேரணி கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக சென்றடைந்து, அங்கும் போராட்டம் தொடர்ந்தது.

இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மூன்று மாவட்ட தலைவிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை வடகிழக்கு தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு நகரில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த போராட்டம் செங்கலடியில் நடத்தப்பட்டது.

கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டபோது சர்வதேச சமூகத்துக்கு அனுப்புவதற்கான மகஜர், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி செல்வராணியினால் வாசிக்கப்பட்டு, வழங்கிவைக்கப்பட்டது.

இன்று காலை தொடக்கம் மூன்று மாவட்டங்களிலும் புலனாய்வாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்களை அச்சுறுத்திய நிலையிலும் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

எமது வீட்டுக்குள் இருந்து எமது உரிமையினையும் எமது ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட அனுமதிக்காத இந்த புதிய அரசாங்கம் முகமூடியுடன் தம்மை அடக்க நினைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எமது மக்களை அடக்கியாள நினைக்கும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தமிழ் மக்களுக்கான எந்த நீதியையும் உரிமையினையும் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து இந்த நாட்டின் ஆட்சியாளர்களை கருத்தில்கொண்டு தமிழ் மக்களுக்கான சர்வதேச சமூகம் உரிமையினையும் நீதியையும் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Share This Article