சீன அரசாங்கம் இலங்கையில் 76 வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கம் கைவிட்டிருந்த வேலைத்திட்டங்கள் உட்பட புதிய வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தமது அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்தது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,
நாடு வங்குரோத்து நிலையிலிருந்ததால் யாரும் கடன் கொடுக்கவில்லை எனவும், ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடனை திருப்பி செலுத்தவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அதனால் நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டதால் கடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
புதிய கால அட்டவணையின் கீழ் கடனை செலுத்துவதற்காக நிறைவு செய்யப்படாமல் இருந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்தும் நடத்தி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததாகத் தெரிவித்தார்.
மேலும் கடனை மீளச் செலுத்தாத காரணத்தால் ஜப்பான் அரசாங்கமும், சீன அரசாங்கமும் நாட்டில் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இடை நடுவில் நிறுத்தி வைத்ததாகச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
“உதாரணமாக எடுத்துக்கொண்டால் நாம் ஜப்பானில் கடனை பெற்றுச் செலுத்தாமல் விட்டிருந்தோம். அதனால் ஜப்பான் அரசாங்கம் மேற்கொண்ட 11 வேலைத் திட்டங்களை நிறுத்தி வைத்தது. சீன அரசாங்கம் சுமார் 30 வேலைத்திட்டங்களை நிறுத்தி விட்டது.
தொடர்ந்தும் கடனை செலுத்தாமல் விடுவதா அல்லது கடன் செலுத்தக் கூடிய வகையிலான ஒரு தீர்வை எட்டுவதா என்பதே எங்களுக்குச் சவாலாகக் காணப்பட்டது.
அதனால் நாங்கள் ஏற்கனவே இருந்த கலந்துரையாடல்களை நிறைவு செய்து டிசம்பர் 21 ஆம் திகதி ஆகுகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடனை செலுத்துகிறோம் என நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். கடனை கொஞ்சம் கொஞ்சமாக 2042 ஆம் ஆண்டு வரை செலுத்துவதற்கான காலத்தை நீடித்தோம். அந்த வகையிலேயே நாங்கள் கடன் மறுசீரமைப்பு செய்தோம்.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்தில் கடனை செலுத்துவதற்கான ஒரு தீர்மானத்திற்கு வர முடிந்தது. டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி எமது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜப்பான் அரசாங்கம் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதாகத் தெரிவித்தது. அவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இடையில் நிறுத்தப்பட்டிருந்த வேலைத்திட்டங்கள் உட்பட புதிய வேலைத்திட்டங்களையும் சேர்த்து 76 வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதாகச் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு செய்திருக்காவிட்டால் இது எமக்குச் சாத்தியமாகியிருக்காது.” எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.