“மாவை சேனாதிராஜா” – வரலாற்றுப் பார்வை!

“மாவை சேனாதிராஜா” - வரலாற்றுப் பார்வை!

editor 2

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்றிரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 82.

இலங்கைத் தமிழர் அரசியலில் மிகப்பெரும் ஆளுமையான மாவையின் இறப்பு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவையின் இறப்பை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.

வீட்டுக் குளியலறையில் தடக்கி விழுந்தமையால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணம் போதனா வைத்திய
சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவை சேனாதிராசா நேற்று இரவு உயிரிழந்தார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் ஒரு நிலைகல், மாவை சேனாதிராசா (சோமசுந்தரம் சேனாதிராஜா). இவர் 1942ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்தவர். யாழ்ப்பாணம் வலி.வடக்கு மாவிட்டபுரத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்.

மாவிட்டபுரத்தை சேர்ந்தவர் என்பதால் சேனாதிராசா தனது பெயருடன்
முன்னிணைப்பாக மாவை என்ற சொல்லை சேர்த்துக் கொண்டார். அந்த கிராமத்தின் கந்தசாமி கடவுள் மாவை கந்தன் என்று அழைக்கப்படுவதை போன்று
மாவை சேனாதிராசாவும் மாவிட்டபுரத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாகவும் விளங்குகிறார். பலர் அவரை எளிதாக சேனாதி, மாவை அல்லது மாவை அண்ணன் என்று அழைக்கிறார்கள்.

தனது இளமைக்கல்வியை வீமன் காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் கற்றார்.

சிறிமா பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு அமைதியின்மை ஏற்பட்ட நாட்கள் அவை. ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புகள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள், கறுப்புகொடி போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என்று அந்தக் காலத்தில் பெருவாரியான அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன.

அந்த போராட்டங்களில் முன்னணியிலிருந்து செயற்படும் இளைஞராக
மாவை சேனாதிராசா இருந்தார்.

இளம் வயதில் பல்வேறு போராட்டங்களில் கலந்து தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன வன்கொடுமை களுக்கு எதிராக குரல் கொடுத்த மாவை 1973இல்
கைது செய்யப்பட்டு 1977இல் விடுதலை செய்யப்பட்டிருந்தார். சிறை சென்றதால்
பல்கலைக்கழக கற்கையை தொடர முடியாத நிலை ஏற்படவே வெளிவாரி கற்கை,
சட்டத்துறை கற்கையையும் தொடர இயலாமல் இடை விலகினார். சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் 1978இல் இந்தியாவிற்கு சென்ற இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்காக சிறுவயது முதலே கிளர்ந்தெழுந்து பல்வேறு அஹிம்சை போராட்டங்களிலே பங்கெடுத்தார். தந்தை செல்வா தமிழ் மக்களுக்காக நடத்திய சத்தியாக்கிரக போராட்டங்களின் போது உடனிருந்து செயற்பட்டார். 11 தடவைகள் கைது செய்யப்பட்டு மொத்தமாக 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார்.

வாலிப முன்னணியின் செயலாளராகவும், இளைஞர் பேரவையின் செயலாளராகவும் இளம் வயதில் செயற்பட்ட இவர், தமிழரசுக்கட்சியின் உறுப்பினராகவும், தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினராகவும் தொடர்ந்தும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சேனாதிராசா 1989 பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13ஆவதாக வந்து தோல்வியடைந்தார். ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13ம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1999
ஜூலை 29ல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2000ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் 2001, 2004, 2010ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செப்ரெம்பர், 2014 இல் சேனாதிராசா இலங்கைத்தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்கட்சி முரண்பாடுகள் மற்றும் வாக்கு வீழ்ச்சியால், மாவை சேனாதிராசா தோல்வி கண்டார். இது அவரது நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மாற்றமாகும்.

இலங்கை தமிழரசுகட்சியின் மிக நெருக்கடியான காலங்களில் தலைவராகப் பணியாற்றி கட்சியை கொண்டு செல்வதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்ட ஒரு உன்னதமான நபர் ஆவார்.

மாவை சேனாதிராசாவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவிட்டபுரம் அன்னாரின் இல்லத்தில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article