சென்னையில் இன்று நடைபெறவுள்ள தமிழ் நாடு அரசின் அயலக தமிழர் தின விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தடுத்துநிறுத்தப்பட்டார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் சிறீதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்நிலையில், குற்றப்புலனாய்வுத் துறையின் மூலம், சிறீதரனுக்கு பயணத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறீதரனின் பழைய கடவுச்சீட்டில் பிழை இருப்பதாகக் கூறி, குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், அவரின் பயணத்தை தடுத்து நிறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, புதிய கடவுச்சீட்டின் மூலம் இப்போதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை சிறீதரன் மேற்கொண்டிருந்தார் என்பதால் இந்த திடீர் தடை எப்படி ஏற்பட்டது என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் அவரை ஒப்படைக்குமாறு தமக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்த குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் அவரை இந்தியப் பயணத்துக்கு நேற்று அனுமதித்திருந்தனர்.
சென்னை – நந்தம்பாக்கத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பொருட்டு நேற்று தினம் இந்தியப் பயணத்துக்காக கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு சென்றபோதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நீண்டநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
குறித்த பயணத்துக்கு அனுமதிக்க முடியாதென்ற அடிப்படையில் நடைபெற்ற நீண்டநேர விசாரணைகளின்போது, இந்தியப் பயணத்திற்காக வருகைதந்த முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்ததன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.