போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் பொலனறுவையில் ஒருவர் கைது!

Editor 1

பொலன்னறுவை மனம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில், போலி சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய வாகன அனுமதிப்பத்திரங்களை தயாரித்து பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 48 வயதுடைய மனம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரிடம் இருந்து 19 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை தயாரித்தமை தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் பேரில், வேரஹெரவிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் உள்ள வாகன சாரதிகளுக்கான பயிற்சி நிலையமொன்றின் நடத்துனர் மற்றும் நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் போலி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39, 60 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 03 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 06 கையடக்கத் தொலைபேசிகள், கணனி மற்றும் சில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மனம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் மனம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article