தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளதா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உயர்மட்டக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகத் தெரிவித்து தற்போதைய அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றது.
அதன்படி, தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகாலமாகப் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
அத்துடன் அரசாங்கம் வெறுமனே வாக்குறுதிகளை மாத்திரம் வழங்காமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.