இலங்கை வரும் ஆய்வுக் கப்பலகளை அனுமதிப்பது தொடர்பில் அவதானம்!

Editor 1

இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையின் கீழ் அனுமதியளிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கு அமைவாக விசேட விதிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் வரும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த தடையை முந்தைய அரசாங்கம் விதித்திருந்தது. எவ்வாறாயினும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் ஏற்பட கூடிய இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் தலைமையிலான சிறப்பு குழுவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இந்த குழுவின் பணியானது உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிப்பதாயின் மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறைகளை கவனத்தில் கொண்டு நிலையான ஒரு செயல்பாட்டு செயல்முறையை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக உருவாக்குவதாகும்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை தற்போது காலாவதியாகியுள்ளது.

எனவே புதிய விதிமுறை அறிமுகம் படுத்தும் வரை எந்தவொரு உலக நாடுகளில் ஆய்வுக்கப்பல்களும் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோராது என்று நம்புவதாக அரசாங்கத்தின் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

சீன ஆய்வுக்கப்பல்கள் வருவதை கண்டித்து இந்தியா இராஜதந்திர அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்து வந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் வரையில் சீன ஆய்வுக்கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்திய கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க ஆய்வுக்கப்பல்களுக்கு தற்காலிக தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article