போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.
அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை
தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.
இதில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.