கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ் ஒப்பந்தத்தின் ஊடாக கிழக்கு அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தால் 2371.83 மில்லியன் ரூபா நிதி உதவி கிடைக்கப் பெறவுள்ளது.
சமூக – பொருளாதார மேம்பாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட முன்மொழியப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின்படி, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 2371.83 மில்லியன் ரூபா மானிய உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் கீழ் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவமளிக்கப்படவுள்ளது. உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாடு தொடர்பாக செயல்படுத்துவதற்கு 33 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதற்கமைய இரு தரப்புக்கும் இடையே முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தக் கட்டமைப்பில் கைச்சாத்திடுவதற்கு நிதி, கொள்முதல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதில் கல்விக்காக 315 மில்லியன் ரூபாவும், சுகதாரத்துக்காக 780 மில்லியன் ரூபாவும், விவசாயத்துக்காக 620 மில்லியன் ரூபாவும், மீன்பிடித்துறைக்காக 230 மில்லியன் ரூபா உட்பட ஏனைய துறைகளுக்காக 2371.83 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்துறை முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.
இவ்விரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இலங்கையின் கடன் சுமையை குறைக்கும் வகையில், கடனுதவி அடிப்படையில் முதலில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நன்கொடை திட்ட உதவிகளாக வழங்குவதற்கான இந்தியாவின் முடிவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.