மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மாகாண மட்டத்தில் பொதுமக்களின் வாய்மொழி மூல கருத்துகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின் கட்டணத்தைக் குறைக்க முடியாது என மின்சார சபை முன்வைத்த யோசனைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பதில் அளித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் 10 முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 17ஆம் திகதி முதல் இது குறித்து எழுத்துப்பூர்வமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கப் பொதுமக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இது தொடர்பில் மாகாண மட்டத்தில் உள்ள மின்சார பாவனையாவார்களிடமிருந்து வாய்மொழிமூல ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்ட செயலகத்திலும், 31ஆம் திகதி ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்ட செயலகத்திலும் பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அவ்வாறே சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் ஜனவரி 3ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திலும், ஜனவரி 4ஆம் திகதி தென் மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் மாத்தறை மாவட்டச் செயலகத்திலும் கருத்துக்களை முன்வைக்க முடியும்.
அத்துடன், எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி குருநாகலிலுள்ள மாகாண சபை அலுவலகத்தில் வடமேல் மாகாண மக்களுக்கும், ஜனவரி 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வட மாகாண மக்களுக்கும் கருத்துக்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், ஜனவரி 8 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அம்பாறை மாவட்ட செயலகத்திலும், ஜனவரி 10 ஆம் திகதி மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலும் கருத்துக்கள் பதிவுசெய்ய முடியும்.
அதற்கமைய, மின்சாரக் கட்டணம் தொடர்பான தமது இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.