மியன்மாரில் சைபர் குற்றவியல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்கள் எண்மர் உட்பட 27 பேர் திங்கட்கிழமை (16) நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தனர்.
நாட்டை வந்தடைந்தவர்களை அவர்களது வீடுகளுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மியன்மாரில் மனித கடத்தல்காரர்களின் பிடியில் மேலும் இலங்கையர்கள் 14 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், மியான்மாரில் சைபர் குற்றவியல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 63 பேர் வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளனர்.
சுரண்டல் மற்றும் ஆட்கடத்தலை தடுக்கும் முகமாக, வெளிநாட்டில் வேலை தேடும் அனைத்து நபர்களும் உரிய நடைமுறைகைளை பின்பற்றுமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.