வவுனியாவில் சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களது முச்சக்கர வண்டிகளைத் திருடி சென்று அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை அமர்த்தி அதன் பின்னர் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு மயக்க மருந்தை கொடுத்து அவர்களை கீழே விழுத்தி விட்டு, முச்சக்கர வண்டிகளைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய அதிரடி விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கெக்கிராவ பகுதியில் வசித்து வரும் 37 வயதான நபரைக் கைது செய்துள்ளதோடு அவர் திருடிச்சென்ற முச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருவோர் தரும் குடிபானங்களை அருந்தாது விழிப்புடன் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.