சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவர நடவடிக்கை!

Editor 1

இரண்டு வாரங்களுக்குள் கலாநிதி பட்டத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம். அது தொடர்பில் எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாட இருக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் நாட்டுக்குள் சர்ச்சை எழுந்துள்ளது. அதனால் தேசிய மக்கள் சக்தி அல்லது சபாநாயகர் இது சம்பந்தமாக விரைவாக தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.

உண்மையில் சபாநாயகர் அசோக்க ரன்வலவுக்கு ஏற்றுக்கொள்ள முடியுமான கலாநிதி பட்டம் இருக்குமானால், தற்போது நாட்டுக்குள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சையில் எந்த பிரயோசனமும் இல்லை.

ஆனால் இதுதொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கத்தின் தாமதம், அரசாங்கம் சார்ப்பாக பேசிய அமைச்சரவை பேச்சாளர் அதற்கு பதிலளிப்பதை தவிர்ந்துகொண்டமை மற்றும் பாராளுமன்ற இணையத்தலத்தில் இருந்து சபாநாயகரின் கலாநிதி பதவியை நீக்கியமை போ்னற விடயங்களுடன் இதில் பாரிய குழப்பம் இருக்கிறது என்பது எமக்கு விளங்குகிறது.

அதனால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சபாநாயகர் அவரது கலாநிதி பட்டத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர எதிர்பார்க்கிறோம். இதுதொடர்பில் நாங்கள் இதுவரை தீர்மானிக்கவில்லை. அவ்வாறு நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் மனச்சாட்சிக்கு அமைவாக பாராளுமன்றத்தில் வாக்களிப்பார்கள் என நினைக்கிறோம் என்றார்.

Share This Article