சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது அவசியம் – புதிய செயலாளர்!

Editor 1

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத் துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நலிவுற்றுள்ளது. ஆகையால் இவ்விருத்துறைகள் மீதான மக்கள் நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது மிக அவசியம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயளாலராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அனில் ஜாசிங்க புதன்கிழமை சுகாதார அமைச்சில் உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து வருடங்களுக்கு பிறகு மீள சுகாதார அமைச்சில் அங்கம் வகிக்க கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நம்பிக்கை என்பது பொதுவாக சிலரிடம் இருக்கும் சிலரிடம் இருக்காது.

நம்பிக்கை என்பது அரிய வகை இரத்தினம் போன்றது. அவ்வாறான நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக, நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு நியாயமான மனிதாபிமானத்துடன் கூடிய சேவையை வழங்க சுகாதார அமைச்சரின் வழிகாட்டலுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மற்றும் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

அதிஷ்டவசமாக நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டத்தில் பங்களிக்கும் வாய்ப்புக்கிடைத்துள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடகத் துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நலிவுற்றுள்ளது. ஆகையால் இவ்விருத்துறைகள் மீதான மக்கள் நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது மிக அவசியம் என்றார்.

இதன்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில்,

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை ஆகிய இரு துறைகளும் பாரிய சவால்கள் உள்ளன. இவ்விருத்துறை மீதான மக்கள் நம்பிக்கையை பெறுவது எமது கடமையாகும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதுடன், புதிய வேலைத்திட்டங்களையும் சுகாதார அமைச்சின் செயலாளரின் அனுபவத்துடனும், ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்

Share This Article