இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பொதுமக்களின் யோசனை மற்றும் பரிந்துரைகள் கோரப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கு, தற்போது அமுலில் உள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி பேண வேண்டும் என்ற தமது முன்மொழிவை அண்மையில் இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்தது.
அதன்படி, குறித்த முன்மொழிவு தொடர்பான வாய்மொழிமூல கருத்துகளைக் கோருவதற்காக ஒவ்வொரு மாகாணங்களிலும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் அமர்வுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் தங்களது எழுத்து மூல சமர்ப்பணங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எழுத்து மூல சமர்ப்பணங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 076 427 1030 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கோ அல்லது மின் கட்டணம் தொடர்பான மக்கள் யோசனை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 6 ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு 3 என்ற முகவரிக்கோ அறிவிக்க முடியும்.
அதற்கமைய, பொதுமக்கள் முன்வைக்கும் யோசனை மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தங்களது இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.