நினைவேந்தல் பகிர்வு விவகாரம்; ஒருவருக்கு விளக்கமறியல்!

Editor 1

மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பான பழைய காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்ட மூவரில், சமூக செயற்பாட்டாளரான கெலும் ஜெயசுமணவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மற்றுமொருவரான பத்தேகம பகுதியைச் சேர்ந்த நபரை டிசம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல்களின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இவ்வருட நினைவேந்தல் நிகழ்வுகள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பத்தேகமவைச் சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜெயசுமண பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article