வேட்பாளர்கள் 21 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

வேட்பாளர்கள் 21 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு!

Editor 1

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 8821 வேட்பாளர்களும் 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். குறித்த காலப்பகுதியில் விபரத்திரட்டை சமர்ப்பிக்காவிடின் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தல் நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் நிறைவடைந்துள்ளது. அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாட்டு மக்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும், அரச மற்றும் தனியார் தரப்பினருக்கும், ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனநாயக ரீதியில் 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே 225 உறுப்பினர்களும் மக்களாணைக்கு அமைய சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஐந்து ஆண்டுகளின் செயற்பாடுகளின் ஊடாகவே தேர்தலின் வெற்றி உறுதியாக தீர்மானிக்கப்படும்.

இம்முறை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 8821 பேர் போட்டியிட்டனர். 2023 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேர்தல் செலவினம் ஒழுங்குப்படுத்தல் சட்டத்துக்கமைய 22 தேர்தல் மாவட்டங்களுக்கான பிரச்சார தொகை நிர்ணயிக்கப்பட்டது.

தேர்தல் மாவட்டத்தின் நிலப்பரப்பு மற்றும் சனத்தொகை ஆகிய அடிப்படை காரணிகளை கருத்திற் கொண்டு தேர்தல் பிரச்சார செலவுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர் ஒருவருக்கு 114 ரூபா செலவழிக்க வேண்டும்.

அதேபோல் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர் ஒருவருக்கு 82 ரூபாவை செலவிட முடியும். இவ்வாறு ஏனைய 20 தேர்தல் மாவட்டங்களுக்கும் தேர்தல் பிரச்சார தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவுத்தொகை தொடர்பான விபரங்களை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 8821 வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்திய வகையில் தேர்தல்கள் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் காரியாலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 21 நாட்களுக்குள் விபரங்களை சமர்ப்பிக்காவிடின் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share This Article