இணைந்த வடக்கு, கிழக்கு தாயகத்தில் தமிழ் மக்களை தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அதன் தனித்துவமான இறைமை – சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் தமிழ்த் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து போராடுவோம் – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்றைய தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
26 பக்கங்கள் கொண்ட அந்தத் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
வருமாறு,
இன்று இலங்கைத்தீவை மையமாகக் கொண்ட பூகோள ஆதிக்கப் போட்டி
யொன்று இடம் பெறுகிறது. அந்தப் பூகோள ஆதிக்கப் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப்போட்டியூடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது, தமிழர்களுக்கான நிகரற்ற பேரம் பேசும் சக்தியாகும்.
இதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னி
லைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ்த் தேசத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது எமது திடமான நிலைப்பாடாகும்.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு
சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு மூலமே உறுதிப்படுத்தப்படமுடியும்.
13ஆம் திருத்தச் சட்டத்தை இனப் பிரச்னை தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாக வேனும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். கடந்த 2017 செப்ரெம்பர் 21 இல் வெளியிடப்படட புதிய ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசமைப்புக்கான
இடைக்கால வரைவை முற்றாக நிராகரிக்கிறோம்.
தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் பிரகாரம்,
இணைந்த வடக்கு – கிழக்கை தாயகமாகக் கொண்டு தமிழ் மக்களை, தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரித்து அதன் தனித்துவமான இறைமையையும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், தமிழ் மக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையின் பிரகாரம், தமிழ்த் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக தொடர்ந்து போராடுவோம்.
மலையக தமிழர்கள், முஸ்லிம்கள் தாம் சுயநிர்ணய உரிமையை கோர உரித்துடையவர்கள் என்ற கோரிக்கைகளை முன்வைப்பின், நாம் அதனை ஏற்றுக் கொள்வோம். ஆனால், சுயநிர்ணய உரிமை அரசியலை முன்னெடுப்பதா?இல்லையா? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக அவர்களுடன் கைகோத்து ஒன்றாக பயணிப்பதற்கு
நாம் என்றும் தயாராகவே உள்ளோம்.
மேலும், இலங்கை அரசமைப்பில், அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான தனிமனிதனுடைய பேச்சுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகின்ற வகையில் இணைக்கப்பட்டுள்ள 1983ஆம் ஆண்டின் 6ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.
தமிழ் மக்கள் மீது இனவழிப்பு, மானுட குலத்துக்கு எதிரான குற்றம் மற்றும் போர் குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை வெளிப்படையானதே. இந்தக்குற்றங்கள் தொடர்பாக காத்திரமான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் மூலமான விசாரணையையே வலியுறுத்துகின்றோம்.
எனினும், தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வட, கிழக்கில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவுடன் உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக இனப்படு கொலையாளிகள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொண்டுள்ளனர்.
இனியும் பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்காமல் உடனடியாக சர்வதேச குற்றவியில் நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அதற்கான அழுத்தங்கள்
தொடர்ந்து வழங்கப்படும். தவிர, வடக்கு – கிழக்கு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டு, அதனை மீளக் கட்டியெழுப்புதல் (பொருளாதாரம், மனிதவளம்) நிலையான அபிவிருத்தி, இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு என்பவற்றை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை கையாளும்முகமாக, வடக்கு-கிழக்கில் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதற்கான நிதி நேரடியாகக் கிடைப்பதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விவசாயம், சுதேச கைத்தொழில், தமிழர் மொழி – கலை – பண்பாட்டு அபிவிருத்தி, மீன்பிடித் துறை அபிவிருத்தி, கல்வி என்பன குறித்தும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடை சட்டம் நீக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி, தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற்றம், அரச – தனியார் காணிகள் விடுவிப்பு, திட்ட மிட்ட சிங்கள – பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு என்பன குறித்தும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கை அக்கறை செலுத்தியுள்ளது. தவிர, இன விடுதலைப் போராட்டத்தை ஆவணப்படுத்துதல், தமிழகம், புலம்பெயர் மக்களுடனான உறவை மேம்படுத்தல், தமிழருக்கான வெளியுறவுக் கொள்கை என்பவை குறித்தும் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம், உடனடி வாழ்வாதார பிரச்னை, அபிவிருத்தி போன்ற அனைத்து விவகாரங்களையும் கையாள தமிழ்த் தேசியப்பேரவை என்ற கட்டமைப்பை
வலுப்படுத்தவும் இந்தப் பேரவையே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அதியுயர் அதிகார சபையாக செயல்படும் விதமாக மாற்றப்படும் – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.