தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு மற்றும் விசேடசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் அறுகம்குடா, பொத்துவில் பகுதிகளில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 3 தினங்களாக இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்சளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மற்றொரு சுற்றுலா தளமான தம்புள்ளையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ரஜமகாவிகாரை, தம்புள்ளை உயவத்தை ரஜமகா விகாரை மற்றும் சுற்றுலாத்தளங்கள், உணவகங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கொழும்பு, வெலிகம, எல்ல பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேசமயம், மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்துக்கு விடுக்கப்பட்ட தாக்குதல் அச்சுறுத்தலால் அங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப் படுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்ற வளாகத்தின் மீது நேற்று அல்லது நேற்றுமுன்தினம் அல்லது நாளை மறுதினம் 28ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படும் என்று கடிதங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மட் டக்களப்பில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. அத்துடன், இந்த எச்சரிக்கை தொடர்பில் விசாரிக்க இரு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் விஸ்தாரா விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நேற்றைய தினம் அவசர நிலை மீளப் பெறப்பட்டபோதிலும் விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டிருந்தன.
இதேநேரம், நாடு முழுவதும் – குறிப்பாக சுற்றுலா தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.