யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு டிஜிற்றல் வலயங்களை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26ஆவது ஆண்டு நிறைவில் பங்கேற்று பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரச சேவையை இலகுவாக்கவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக உருவாக்கவும் டிஜிற்றல் மயமாவது அவசியம். நாட்டை டிஜிற்றல் மயமாக்குவதற்கு அரசாங்கம் தெளிவான பார்வையை கொண்டுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறையை மேம்படுத்துதல் மற்றும் டிஜிற்றல் பொருளாதாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையிலான
கொள்கை நாட்டுக்கு தேவை. இதன்படி, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு டிஜிற்றல் வலயங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சர்வதேச டிஜிற்றல் நிறுவனம் மற்றும் தேசிய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதும் அவசியமானது. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில் நுட்ப கல்வியை கட்டியெழுப்புதல், அதற்கு தேவையான வசதிகளை வழங்குதல், தொழில் துறையாளர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளை வழங்குவதும் முக்கியமானது. இதே போன்று டிஜிற்றல் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் அவசியமாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.