பெரும்பாலும் அரசியல் சார்ந்த காரணிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற அதேவேளை, ஆட்சிமாற்றம் நிகழும்போது அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்படுகின்ற கொள்கைத் தீர்மானங்களைக் கொண்ட இலங்கை போன்றதொரு நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளில் அரசாங்கம் நேரடியாகத் தலையீடு செய்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் தொடர்ச்சித்தன்மை பேணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது :
பெரும்பாலும் அரசியல் சார்ந்த காரணிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற அதேவேளை, ஆட்சிமாற்றம் நிகழும்போது அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்படுகின்ற கொள்கைத் தீர்மானங்களைக் கொண்ட இலங்கை போன்றதொரு நாட்டின் வர்த்தக செயற்பாடுகளில் அரசாங்கம் நேரடியாகத் தலையீடு செய்வதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும். வாக்கு வங்கி அடிப்படையிலான அரசியல் மற்றும் அமைச்சர்களின் மாற்றம் என்பவற்றுக்கு ஏற்ப அடிக்கடி மாற்றமடையும் கொள்கைகள் நாட்டில் ஸ்திரமற்ற மற்றும் தொடர்ச்சியற்ற தன்மையைத் தோற்றுவித்திருக்கின்றன.
இருப்பினும், குறிப்பாக பெற்றோலியம் எரிபொருள், நீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கும் துறைகள் மேற்கூறப்பட்ட விதியிலிருந்து விதிவிலக்குப் பெறமுடியும். வெளிப்படையான போட்டித்தன்மையின் மூலம் நுகர்வோருக்கு சாதகமான விலையில் மின்சாரத்தை வழங்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படும் பட்சத்தில், மின்னுற்பத்தியை தனியார்மயப்படுத்த முடியும். ஆனால், இவ்வாறான அதிக கேள்வியுடைய சேவைகள் செலவின அடிப்படையிலான விலையிடல் முறைமையுடன் கூடியதாக அரசினாலேயே கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.
விசேடமாக முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகள் உள்ளடங்கலாக சகலவற்றிலும் நிலையான, தொடர்ச்சித்தன்மை வாய்ந்த கொள்கைகளைப் பேணுவது பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கு மிக அவசியமாகும். மாறாக கொள்கைகளில் அடிக்கடி மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சியிலும், சுபீட்சத்திலும் சடுதியான பின்னடைவை ஏற்படுத்தும்.
உதாரணமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் துறைமுக நகரத்திட்டம் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஜப்பான் நிதியுதவியின் கீழான இலகு ரயில் சேவைத்திட்டம் இரத்துச்செய்யப்பட்டமை என்பன முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தன. எனவே நாம் கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும், குறுங்கால நலன்களைப் புறந்தள்ளி, நாட்டின் நீண்டகால அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதும் இன்றியமையாததாகும். ஆகவே குறிப்பாக முதலீடுகளுடன் தொடர்புடைய துறைகளில் கொள்கைசார் தொடர்ச்சித்தன்மையைப் பேணுவதென்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் மிகவும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.