மக்களின் அவதானத்தை ஈர்த்துக் கொள்வதற்காகவே, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாத அறிக்கைகள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடை பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திற்குச் சவால் விடுத்திருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 அறிக்கை மற்றும் குறித்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
எனினும், அந்த அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போகவில்லை எனவும் அரசாங்கத்திடமுள்ள அந்த அறிக்கைகளை 7 நாட்களுக்குள் வெளியிடாவிட்டால் தாம் அவற்றை பகிரங்கப்படுத்துவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, உதய கம்மன்பிலவிடம் அவ்வாறான அறிக்கைகள் இருப்பின் அதனை 3 நாட்களுக்குள் வெளியிடுமாறும் அமைச்சர் விஜித ஹேரத் சவால் விடுத்திருந்தார்.
இந்தநிலையில், அரசியல் மேடைகளில் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.