ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத ஐ.எம். இமாம் மற்றும் ஏ.என்.ஜே டி அல்விஸ் அறிக்கைகளை வெளியிடுமாறு கோரியிருந்தார்.
குறித்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கத்துக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ள உதய கம்மன்பில, அரசாங்கம் அவற்றை வெளியிடத் தவறினால், தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்துவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஏதேனும் அறிக்கைகள் இருப்பின் அவற்றை மூன்று நாட்களுக்குள் வெளியிடுமாறு உதய கம்மன்பிலவிடம் கோரியுள்ளார்.
தற்போது அரசாங்கத்தின் வசம் உள்ள விசாரணை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டு, விடுபட்ட பக்கங்கள் அல்லது வேறு விடயங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பிலவுக்கு அறிக்கை கிடைத்திருந்தால், அதை அவர் தாமதமின்றி சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அந்த அறிக்கையை அவர் எவ்வாறு கைப்பற்றினார் என்பதையும் கண்டறிய வேண்டும்.
உதய கம்மன்பில இந்த அறிக்கையை இவ்வளவு காலம் மறைத்து வைத்திருந்தால் அதுவும் பாரிய குற்றமாகும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இது தொடர்பில் ஊடங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த விடயம் தொடர்பில் நாளை தினம் உரிய பதிலை வழங்குவதாகத் தெரிவித்தார்.