இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர், மாவை.சோ.சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் பதவிகளில் தொடர்வதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரரான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான மார்க்கண்டு நடராசா சட்டத்தரணி தவேந்திரராசா டினேஸ் ஊடாக குறித்த மனு நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கலாநிதி.குமாரவடிவேல் குருபரனால் வரைவு செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில், குடியியல் நடவடிக்கை முறைக்கோவையின் பிரிவு 16இன் கீழான அறிவித்தலை பிரசுரிப்பதற்கான கட்டளைக்கு அமைவாக, மாவை.சோ.சேனாதிராஜா, மருத்துவர் ப.சத்தியலிங்கம், சேவியர் குலநாயகம், ஆகிய எதிராளிகள் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு கூட்டப்பட்டு முறையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் வரை கட்சியின் நிர்வாகப் பதவி எதனையும் வகிக்கத் தகுதி அற்றவர்கள் என்று நிரந்தர தடைக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும்.
மாவை.சோ.சேனாதிராஜா, மருத்துவர் ப.சத்தியலிங்கம், ஆகிய எதிராளிகள் 27.01.2024இற்குப் பின்னரான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டியமையும் அதில் எடுக்கப்பட்ட தீhமானங்களும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாப்புக்கு முரணானவை என்ற வகையில் அவை வெற்று வெறிதானவை என்று கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தமிரசுக்கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் என்ற அடிப்படையில் கட்சியின் மத்திய செயற்குழு என்ற பெயரில் எவ்விதமான கூட்டங்களையும் கூட்டக்கூடாது என்ற இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும்.
சேனதிராஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற கோதாவில் செயற்படக்கூடாது என்று இடைக்கால தடைக் கட்டளை பிறப்பிக்கப்படுவதோடு சத்தியலிங்கம் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற கோதாவில் செயற்படக்கூடாது என்ற இடைக்கால தடைக் கட்டளையும் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதென மன்று தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.