எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் திகதிகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறையுடன் தொடர்புடைய காரியாலயங்களைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சல் வாக்களிக்க எதிர்வரும் 30ஆம் திகதி மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பிற அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவ முகாம்களைச் சேர்ந்தவர்கள் நவம்பர் மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளில் அஞ்சல் வாக்கினைப் பதிவு செய்ய முடியும்.
அதேநேரம் குறித்த தினங்களில் அஞ்சல் மூல வாக்கினைப் பதிவுசெய்ய முடியாதவர்களுக்காக எதிர்வரும் நவம்பர் 7ஆம் மற்றும் 8 ஆம் திகதிகள் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 26ஆம் திகதி அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 27 மற்றும் 31ஆம் திகதிகளிலும், நவம்பர் 3ஆம் திகதியும் விசேட நாட்களாகக் கருதிக் குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.