ஜெனிவாவில் நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை விடயத்தில்
உள்நாட்டுச் செயன்முறை மூலம் மனித உரிமை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோதே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகால கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைவை இலங்கை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன், குறித்த தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள்
பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசு
உறுதிபூண்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – என்றார்.