முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி ஆசிரியர்களால் கறுப்புபட்டி அணிந்து கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று மேற்கொள்ளப்பட்டது.
முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் தங்கியிருந்த வீடும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே குறித்த விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளியை கைது செய்யுமாறும், ஆசிரியருக்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் நேற்றுக் காலை 8.00மணி தொடக்கம் 8.25 மணி வரை பாடசாலை வாயிலில் கையில் கறுப்புப்பட்டி அணிந்து கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.