ஈழத்தமிழர்களின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் உணர்ந்தும், ஏற்றும் செயற்படத்தக்க அரசியல் கூருணர்வும், சகோதரத்துவமும் மிக்க உங்களது ஆட்சிக்காலம் இலங்கையின் துயர வரலாறுகளை மீள நிகழ்த்தாத காலமாக, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை நோக்கிய திருப்பங்கள் நிகழும் காலமாக அமையவேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை செவ்வாய்கிழமை (01) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றி குறித்து தனது வாழ்த்தினை வெளிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், வட, கிழக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள், அர்த்தமுள்ள அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோருடன் கலந்துரையாடிய சிறிதரன், ஜனாதிபதியிடம் கடிதமொன்றையும் கையளித்தார்.
அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
காலமாறுதல்களின் அடிப்படையில், இந்த நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்த்த எமது மக்களின் ஆணையை ஏற்று, இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு எனது மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உங்களது ஆட்சியின்மீது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பைப்போன்று, இலங்கையின் சுதேசிய இனத்தவர்களான ஈழத்தமிழர்களும் தமது அடிப்படை உரித்துகள் மீதான சாதக நகர்வுகள் உங்களது ஆட்சிக்காலத்திலேனும் ஈடேறும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் எனும் செய்தியை அம்மக்களின் பிரதிநிதியாக உங்களிடம் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
இந்த நாட்டில் கடந்த ஏழரை தசாப்தகாலமாக ஈழத்தமிழர்கள் முகங்கொடுக்கநேர்ந்த இனவன்முறைப்பாதிப்புகள், அவற்றுக்கு நீதிகோரி மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரின் விளைவுகள், போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமிழர் தாயகமான வட, கிழக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத, மொழி மற்றும் கலாசாரப் படுகொலைகள், கைதுகள், காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருப்பினும் உங்களது ஆட்சியில் அத்தகைய துயர சம்பவங்கள் இடம்பெறாதிருக்கும் என்ற எமது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை நீங்கள் கரிசனையுடன் அணுகுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அதன்படி வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் நில அபகரிப்புக்கள் உள்ளிட்ட விடயங்களில் உங்களின் துரிதமானதும், சாதகமானதுமான நடவடிக்கைகளை கோரி நிற்கின்றேன்.
அதேபோன்று போர்க்காலத்தில் இனத்துக்காகப் போராடி மடிந்த தமது சொந்தங்களை நினைவுகூரும் உரிமை கூட மறுக்கப்பட்ட இந்த நாட்டில், ஒரு போரியல் இயக்கத்தின் வழிவந்த ஒருவராக எமது மக்களின் உணர்வுகளையும், அதிலுள்ள நியாயப்பாடுகளையும் நீங்கள் புரிந்துணர்ந்து செயற்படுவீர்கள் என நம்புகின்றேன். அதற்கமைய நாட்டின் நல்லிணக்கத்துக்கு துளியேனும் பாதிப்பை ஏற்படுத்தாத, உணர்வுநிலைப்பட்ட நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கு எமது மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை உறுதிசெய்யவேண்டும் எனவும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் ஈழத்தமிழர்களின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் உணர்ந்தும், ஏற்றும் செயற்படத்தக்க அரசியல் கூருணர்வும், சகோதரத்துவமும் மிக்க உங்களது ஆட்சிக்காலம் இலங்கையின் துயர வரலாறுகளை மீள நிகழ்த்தாத காலமாக, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை நோக்கிய திருப்பங்கள் நிகழும் காலமாக அமையவேண்டுமென வலியுறுத்துகின்றேன். அத்தோடு தமிழ்மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய தூய அரசியல் நகர்வுகள் சார்ந்த உங்களது பயணத்தில் எமது பரிபூரண ஒத்துழைப்பு உங்களுடன் இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.