நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பொதுமக்கள் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை தமது வாக்குகளை செலுத்த முடியும். வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை சரிசர நிறைவேற்ற வேண்டும் என்று
தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
மக்கள் வாக்களிப்பதற்காக 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்கள்
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட
வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியும்.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் இன்றைய தினமும் தமக்கான அஞ்சல் பணிமனைக்கு சென்று ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என்று தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார்.
வாக்களிக்கும் முறை வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயர், மற்றும் சின்னத்துக்கு அருகே உள்ள பெட்டியில் ஓ புள்ளடியிட்டு தமது வாக்கை செலுத்த முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட விருப்புகளையும் வாக்களர்கள் தெரிவு செய்யமுடியும்.
எனினும் அதிகபட்சம் மூவருக்கே வாக்களிக்க முடியும். வேட்பாளர்களுக்கு 1, 2, 3 என்ற விருப்பத் தெரிவை இடுவதன் மூலம் வாக்காளர்கள் தமது
தெரிவை செய்ய முடியும். இருவரை தெரிவு செய்ய விரும்பின் 1, 2 என்றும்
தெரிவு செய்ய முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு புள்ளடி இடுவதும் அல்லது
புள்ளடியும் இலக்கமும் இடுவதும் அல்லது 1 இலக்கத்தை குறிப்பிடாமல் அடுத்த இலக்கங்களை குறிப்பிடுவதும் தவறாகும். மேலும், வாக்குச்சீட்டில் வேறு ஏதேனும் அடையாளங்கள் அல்லது எழுத்துகள் எழுதப்பட்டிருப்பின் அது நிராகரிக்கப்பட்ட வாக்காகக் கருதப்படும்.
இதேவேளை, வாக்களிப்பு தினமான இன்றும் வாக்குகள் எண்ணப்பட்டு பெறு பேறுகள் அறிவிக்கப்படும் காலத்திலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் கடமைக்காக 63 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.