இன்றைய தினம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்ததும் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன், பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் அவர் பெற்றோர்களிடம்
கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாரான மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இனியாவது மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
பரீட்சை எழுதிய பின், பரீட்சை வினாத்தாளை மீண்டும் மாணவர்களிடம் கொடுத்து, அவர்களை எழுத வைத்து, விடைகள் சரியாக உள்ளதா? என சோதித்து
பார்ப்பதில் பலனில்லை.
புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வாழ்வில் சந்திக்கும் இடையூறுகளில் ஒன்று எனவும், வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கூறி அவர்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் மாணவர்கள் இழந்த தங்களது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்குங்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர், பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.